-->

Ticker

Header Ads Widget

உன் அர்ப்பணிப்பு எங்கே? உன் தீர்மானத்தை என்ன செய்தாய்? - அருண் மற்றும் ஜேக்கப் வாழ்க்கைப் பயணம்- இது ஒரு உண்மை சம்பவம்


 அருண் மற்றும் ஜேக்கப் இருவரும் தமிழ் நாட்டிலுள்ள ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்கள். இருவரும் ஒரே பட்டணத்தில் வளர்ந்து வந்ததால் அதே பட்டணத்திலுள்ள ஒரு சபையில் அங்கத்தினராயிருந்து அதே சபையில் ஞாயிறு வகுப்பு மற்றும் விடுமுறை வேதாகமப் பள்ளிகளில் சேர்ந்து சென்று வந்தனர். ஒரு விடுமுறை வேதாகமப்பள்ளியின் சிறப்புக் கூடுகையில் இருவரும் வருங்காலத்தில் மிஷனரிகளாகச் செல்வோம் என்று தீர்மானித்தார்கள். இருவரும் தங்கள் பள்ளிப் படிப்பிற்குப் பின் அறிவியல் (Science/Zoology) பாடத்தில் பட்டப்படிப்பிற்காகக் கல்லூரியில் சேர்ந்தனர். அருண், தேவன் தன்னுடைய எதிர்காலப் பணியையும் அதன் அடிப்படையில் படிப்பையும் தெரிந்துகொள்ள வழிநடத்துமாறு ஒழுங்கான முறையில் தொடர்ந்து ஜெபித்து வந்தான். ஜேக்கப் தன்னுடைய எதிர்காலப் பணியைக் குறித்தும் படிப்பைக் குறித்தும் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதில் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை(அதிக அக்கறை காட்டவில்லை.) அவனுடைய பெற்றோர் விசுவாசிகளாக இருந்தாலும் ஜேக்கப் ஒரு நல்ல கல்லூரிப் பேராசிரியராகி, அதிக சம்பளம் பெற்று, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவனாகவாழவேண்டும் என்று விரும்பினார்கள்.


அருண், கர்த்தர் தன்னை இந்தியாவில் இன்னும் வேதாகமம் மொழிபெயர்க்கப்படாத ஆதிவாசி மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிக்காக அழைக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். எனவே மொழிபெயர்ப்புப் பணியைத் திறம்படச் செய்யும்படி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக (P.G) மொழியியல் பாடத்தைத் (Linguistics) தேர்வு செய்தான். பட்டப்படிப்பில் அறிவியல் படிப்பவர்கள் முதுகலைப்படிப்பில் மொழியியல் படிப்பைத் தெரிந்தெடுப்பது பொதுவாக செய்யப்படுவதில்லை. முதுகலைப்படிப்பிற்குப் பின் அருண் தான் குறிப்பாக எந்த மொழியில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டுமென்பதைத் தீர்மானிக்க ஆண்டவர் வழிநடத்தும்படி ஜெபித்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலுள்ள மொழிகளைக்குறித்த விவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் ஜெபித்தான். ஆண்டவர் தன்னை குஜராத்திலுள்ள "ராட்வி" என்ற குறிப்பிட்ட ஆதிவாசி மொழியில் மொழிபெயர்க்க வழிநடத்துகிறார் என்று உறுதிசெய்து கொண்டான். எனவே அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் அந்த மொழியை ஆராயும்படி பி.எச்.டி படிப்புக்குப் பதிவு செய்து முடித்தான். அதன்பின்பு அம்மொழியினருக்கு வேதாகம மொழிபெயர்ப்பாளரானான்


அநேக வருடங்களுக்குப்பின் அருண் தன் சொந்த பட்டணத்திற்கு வந்தபோது ஜேக்கப்பை சந்திக்க நேர்ந்தது.ஜேக்கப் இப்போது ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவனது மனைவியும் கல்லூாயில்பேராசிரியை. அவன் இப்போது இரண்டு அழகான பிள்ளைகளுக்குத் தகப்பன். அருண் அவனுடன் நேரம் செலவிட்டு பேசும் நேரத்தில், ஜேக்கப் மனச் சமாதானமற்றவனாய், ஆண்டவருடைய சித்தத்தை தன் வாழ்க்கையில் செய்யத் தவறிவிட்டேன் என்ற மிகப்பெரும் குற்ற உணர்வைச் சுமந்து கொண்டு, அதனால் கவலை பெருத்தவனாய், சரீரத்தில் தீராத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவனாய் இருந்தான் என்பது தெரியவந்தது. நான் கனவு கண்டது போல எனது குடும்பத்தையும் வாழ்க்கையையும் ரசனையுடன் அனுபவிக்க இயலவில்லையே என்ற ஏக்கமும், நான் ஒரு கவலையுற்ற சோகமான மனிதனாகவே எனது வாழ்க்கையை முடிக்க நேரிடுமோ என்ற ஆதங்கமும் அவனுக்குள் இருந்தது. ஆனால் அவன் தொடர்ந்து சபைக்கு செல்லும் விசுவாசிதான் என்பது குறிப்பிடத்தக்கது.


குழு விவாதத்திற்கான கேள்விகள்

 

1. "தீர்மானங்கள் எடுப்பது எப்படி" என்பதைக்குறித்து அருணுடைய வாழ்க்கையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள்?

 

2. ஜேக்கப் சந்தோஷமில்லாதவனாயும் திருப்தியற்றவனாயும் இருப்பதற்கான காரணங்கள் என்ன? அது நியாயமானதா? ஜேக்கப் தனது வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள அவனுக்கு என்ன ஆலோசனை கூறுவீர்கள் ?

 

3. "மிஷன்" மற்றும் "மிஷனரி' என்பதைக் குறித்த ஜேக்கப்பின் புரிந்துகொள்ளுதலைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? அது சரியானதா?

 

உங்கள் பதிலை கீழேயுள்ள Comment Box- ல் பதிவிடவும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்